தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.ரெயுடன் ஜோடி சேர்ந்து அசைக்க முடியாத முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சரோஜாதேவி. ஆனால், அவரது திரை வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையாகவும், சரிவுக்குக் காரணமாகவும் அமைந்தது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வருகை தான் என்று மூத்த சினிமா விமர்சகர் டாக்டர் காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி ‘பணத்தோட்டம்’, ‘பாசம்’, ‘கொடுத்து வைத்தவள்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு பெரிதாகப் பேசப்படவில்லை. இருப்பினும், சிவாஜி கணேசனுடன் நடித்த ‘பாலும் பழமும்’ படத்தில் அவர் சிறப்பான நடிப்பை வழங்கினார்.
ஆனால், எம்.ஜி.ஆர் படங்களில் ஜெயலலிதா அதிகமாக நடிக்கத் தொடங்கியபோது, சரோஜாதேவிக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. சிவாஜி, ஜெமினி கணேசன் போன்றோருடன் தேவிகா, சாவித்திரி போன்ற நடிகைகள் நடிக்கத் தொடங்கியதும், கே.ஆர்.விஜயா திரையுலகில் நுழைந்ததும் அவரது மார்க்கெட்டைப் பலவீனப்படுத்தியது.
ஜெயலலிதா நடித்த ‘குமரிப் பெண்’ படத்தில் வரும் ‘ஜின் ஜினாக்கடி’ பாடல் மற்றும் ‘சொன்னால் என்ன வந்தால் என்ன’ பாடலில் ஜீன்ஸ் அணிந்து ஆடியது போன்ற கவர்ச்சியான காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் விளைவாக, ஜெயலலிதா ஒரு கவர்ச்சி நடிகையாகவே மாறிப்போனார்.
ஜெயலலிதாவின் இந்த ‘கிளாமர் ரூட்’ காரணமாக மஞ்சுளா, லதா போன்ற நடிகைகளும் அதே பாதையைப் பின்பற்ற ஆரம்பித்தனர். இதனால், சரோஜாதேவிக்குக் கிடைத்த வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்து, அவரது மார்க்கெட் படிப்படியாகச் சரியத் தொடங்கியது என்று காந்தராஜ் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
