பென்ஷன் வாங்குறீங்களா…? உங்கள் வீட்டிற்கே தேடி வரும் சேவை…. இந்த சான்ஸ் மிஸ் பண்ணிறாதீங்க…!!

By Devi Ramu on கார்த்திகை 23, 2025

Spread the love

மத்திய அரசு, மாநில அரசு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPFO) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட அனைத்து ஓய்வூதியதாரர்களும் நவம்பர் 1ஆம் தேதி முதல் தங்களது ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஓய்வூதியதாரர்களின் சிரமத்தைக் குறைக்கும் நோக்கில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்திய அஞ்சலக பேமென்ட்ஸ் வங்கி (IPPB), ஓய்வூதியதாரர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே தபால் ஊழியர்கள் மூலம் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சேவையைப் பெற, தபால் ஊழியர்கள் பயோமெட்ரிக் (கைவிரல் ரேகை) அல்லது முக அங்கீகாரச் செயலியைப் பயன்படுத்திச் சான்றிதழைச் சமர்ப்பிப்பார்கள்.

   

இந்தச் சேவைக்குச் சேவைக் கட்டணமாக வெறும் ரூ. 70 மட்டுமே தபால் ஊழியரிடம் செலுத்த வேண்டும். இந்தச் சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள், தங்களது ஆதார் எண், மொபைல் எண், ஓய்வூதிய கொடுப்பனவு ஆணை எண் (PPO) மற்றும் ஓய்வூதியக் கணக்கு விவரங்களைத் தபால் ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரரின் ஆதார் அட்டையும், அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணும் கட்டாயம் செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

   

இந்தச் சேவையைப் பெற ஓய்வூதியதாரர்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தையோ அல்லது தங்கள் பகுதியைச் சேர்ந்த தபால் ஊழியரையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம். அல்லது https://ccc.cept.gov.in/ServiceRequest/request.aspx என்ற இணையதளம் வாயிலாகவோ, “Postinfo” என்ற செயலியின் மூலமாகவோ தங்கள் கோரிக்கையைப் பதிவு செய்யலாம்.

 

அனைத்துப் பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்களும் இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, கால அவகாசத்திற்குள் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. தவறும் பட்சத்தில், ஓய்வூதியம் தொடர்ந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.