பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பைத் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ளது. வேலை மாறும்போது அல்லது தகவல் பிழைகள் காரணமாக உங்களது யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பருடன் (UAN) தவறான உறுப்பினர் ஐடி (Member ID) இணைக்கப்பட்டிருந்தால், அதைச் சரிசெய்வதற்கான வழிமுறையை EPFO எளிதாக்கியுள்ளது.
தவறான உறுப்பினர் ஐடி இணைக்கப்பட்டிருந்தால், அது உங்களது PF இருப்பு, பணி வரலாறு மற்றும் எதிர்கால பரிமாற்றங்களைப் பாதிக்கும் என்பதால், இந்தத் திருத்தம் அவசியம். இப்போது, எந்த அலுவலகத்துக்கும் செல்லாமல், EPFO-வின் ஒருங்கிணைந்த உறுப்பினர் இணையதளம் மூலமாகவே இதைச் சரிசெய்ய முடியும்.
1. UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPFO இணையதளத்தில் உள்நுழைய வேண்டும்.
2. உள்நுழைந்த பிறகு, Service History பகுதிக்குச் சென்று, இணைக்கப்பட்டுள்ள ஐடிகளின் பட்டியலைப் பார்க்க வேண்டும்.
3. அதில் உள்ள தவறான ஐடியைத் தேர்ந்தெடுத்து, நீக்கும் விருப்பத்தை (Delink option) தேர்வு செய்ய வேண்டும்.
4. நீக்குவதற்கான காரணத்தை விளக்கமாக அளித்த பின்னர், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு, கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
5. கோரிக்கை வெற்றிகரமாகச் செயலாக்கப்பட்டால், தவறான ஐடி Service History-ல் இருந்து மறைந்துவிடும்.
எனினும், ஒருவேளை அந்தத் தவறான ஐடியைப் பயன்படுத்தி நிறுவனம் ஏற்கனவே ECR (மின்னணு சலான் ரிட்டர்ன்) தாக்கல் செய்திருந்தால், இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்படும். அப்போது, முதலாளி அல்லது EPFO அமைப்பின் உதவியை நாட வேண்டியிருக்கும். காகித வேலைகளைக் குறைத்து, ஊழியர்கள் தங்கள் PF விவரங்களைச் சரியாகப் பராமரிக்க உதவும் இந்த ஆன்லைன் வசதி மிகுந்த பயனளிக்கும்.
