தற்போது இந்தியாவில் ரிசர்வ் வங்கி (RBI) பெயரில் புதிய வகை தானியங்கி குரல் அழைப்பு மோசடி தலைதூக்கியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உண்மைச் சரிபார்ப்பு அமைப்பான PIB Fact Check எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோசடி கும்பல்கள், “உங்கள் கிரெடிட் கார்டில் மோசடி நடந்துள்ளதால், வங்கிக் கணக்கு முடக்கப்படும்” என்று கூறி மக்களைப் பதற்றமடையச் செய்கின்றனர்.
ஆனால், இந்திய ரிசர்வ் வங்கி ஒருபோதும் வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புவதோ அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்டுத் தொலைபேசியில் அழைப்பதோ இல்லை என்று PIB திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
மோசடி செய்பவர்கள் காலர் ஐடியை மாற்றி உண்மையான வங்கியில் இருந்து பேசுவது போல் தோற்றம் அளிப்பார்கள். இதை நம்பி மக்கள் அழைப்பை ஏற்றால், கணக்கைச் சரிபார்க்க வேண்டும் என்று கூறி OTP அல்லது வங்கி விவரங்களைக் கேட்கிறார்கள். இந்த விவரங்களைக் கொடுத்த சில நிமிடங்களிலேயே பணம் மொத்தமாகத் திருடப்படுகிறது.
இதைத் தவிர்க்க, தேவையற்ற அழைப்புகளை நம்பாதீர்கள். உங்கள் அட்டை எண், PIN அல்லது OTP-யை யாருடனும் பகிர வேண்டாம். வங்கி குறித்து சந்தேகம் வந்தால், நீங்கள் நேரடியாக வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணுக்கு அழைத்து விசாரிக்கவும். சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் அல்லது செய்திகளை PIB-க்கு +91 8799711259 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம்.
