பொதுவாகவே எல்லா காலங்களிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றுதான் முட்டை. புரதத்தின் மிகச்சிறந்த மூலமாக திகழும் முட்டை சாப்பிடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான விஷயம். ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிட வேண்டும் என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. முட்டையில் வைட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக இருப்பதால் புரதத்திற்கு முட்டைதான் சரியான உணவாக இருக்கும். உடல் எடையை குறைப்பவர்களுக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப்படுகின்றது. அதனைப் போலவே கட்டுமஸ்தான உடலை பெறுவதற்கும் முட்டையை சாப்பிடுகிறார்கள். முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி சத்து அதிக அளவில் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் முட்டை உதவுகிறது.
மூளையின் சுறுசுறுப்பான இயக்கத்திற்கும் ஞாபகத்திறன் அதிகரிப்பதற்கும் முட்டையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. முட்டை ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டிருந்தாலும் மருத்துவர்களின் கருத்துப்படி அதிக அளவில் முட்டை சாப்பிடுவது என்பது சில ஆரோக்கிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும். முட்டை அதிக புரத சத்து நிறைந்ததால் அதன் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்திருக்கும் .
அதாவது ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பும் காணப்படுகின்றது. ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் அதிகமான முட்டையை சாப்பிடுவதால் கொழுப்பின் அளவு அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பு ஏற்படும். ரத்தத்தில் நிறைவுற்ற கொழுப்பு அதிகரிக்கும். அவை உடலுக்கு கெட்ட கொழுப்பாக மாறி பல உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். குறிப்பாக இதயம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தசைகள், மூளை, கண்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் சிறந்த எரிபொருளாக முட்டை திகழ்கின்றது. ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு முட்டைகள் சாப்பிடுவது பாதுகாப்பானது. இதய நோய் வரக்கூடிய ஆபத்து காரணிகள், நீரிழிவு நோய் அல்லது அதிக கெட்ட கொழுப்பு உள்ளவர்களுக்கு வாரத்திற்கு சுமார் 4 முதல் 7 முட்டைகள் சாப்பிடுவதுதான் நல்லது. அதைவிட அதிகமான முட்டையை எடுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
