தொடர்ந்து ஹெட்போன் யூஸ் பண்றீங்களா…? உடனே காது கேட்காமல் போகுமா…? டாக்டர் சொல்லும் அட்வைஸ்…!!

By Devi Ramu on கார்த்திகை 11, 2025

Spread the love

ஹெட்ஃபோன் அதிகம் பயன்படுத்துவதால் தலைவலி, செவித்திறன் குறைவு போன்ற பிரச்னைகள் வரலாம் என காது, மூக்கு, தொண்டை நிபுணர் கார்த்திக் மாதேஷ் தெரிவித்தார். பலர் ஹெட்ஃபோன் திடீரென காது கேட்காமல் போகும் என நினைக்கின்றனர். ஆனால் அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாதிப்பை ஏற்படுத்தும்.

அருகில் இருப்பவர்கள் ஒரு விஷயத்தை இருமுறை சொல்ல வேண்டியிருந்தால், பேசும்போது இரைச்சல் அதிகமாகக் கேட்டால், நீங்கள் சத்தமாகப் பேசினால், ஹெட்ஃபோன் போட்ட சில நிமிடங்களில் தலைவலி வந்தால், காதில் அசௌகரியம் அடிக்கடி ஏற்பட்டால், கழற்றிய பின்னும் ரீங்காரம் கேட்டால் உடனே கவனம் செலுத்த வேண்டும்.

   

இன்றைய ஹெட்ஃபோன்கள் காது உட்பகுதி வரை செல்கின்றன. ரப்பர் படலம் செவித்திறன் திசுக்களைப் பாதிக்கும். காற்று உள்ளே செல்வதைத் தடுக்கும். ஆய்வில் ஹெட்ஃபோன் பயன்படுத்துவோருக்கு 5-6 மடங்கு செவித்திறன் இழப்பு வாய்ப்பு உள்ளது தெரியவந்துள்ளது.

   

செவித்திறன் இழந்தால் பழைய நிலைக்கு வராது. காது கருவிகள் மூலம் ஓரளவு சரி செய்யலாம். கண் பாதுகாப்புக்கு 20-20-20 விதி உண்டு. ஹெட்ஃபோனுக்கு 60-60 விதி பின்பற்றவும். சத்தத்தை 60% க்கு மேல் வைக்கக் கூடாது. 60 நிமிடங்களுக்கு மேல் காதில் வைத்திருக்கக் கூடாது. 10-15 நிமிடங்களுக்கு ஒருமுறை இடைவெளி கொடுக்கலாம்.

 

இயர்பட்ஸுக்கு பதில் ஓவர்-தி-இயர் ஹெட்ஃபோன் பயன்படுத்துவது நல்லது. பணி அல்லாத நேரத்தில் பாடல், ரீல்ஸ் கேட்பதைத் தவிர்க்கவும். சத்தமான இடத்தில் ஹெட்ஃபோன் போட்டு சத்தத்தை உயர்த்தக் கூடாது. ப்ளூடூத் ஹெட்செட் தொடர்ந்து அணிவது கழுத்து வலியை ஏற்படுத்தும். டிஜிட்டல் சாதனங்களை அளவுக்கு மீறி பயன்படுத்தாதீர்கள். காதுகளுக்கு சுவாசிக்க இடம் கொடுங்கள்.