தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை சமீபத்தில் திமுக நடத்திய போது அந்த கூட்டத்தில் தேமுதிக பங்கேற்றது தமிழக அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பி இருந்தது. வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணியை தேமுதிக இதுவரை அறிவிக்காமல் உள்ள நிலையில் திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த போதிலும் அதிமுகவுடனும் தொடர்ந்து ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டிய கூட்டத்தில் கலந்து கொண்டதன் நோக்கம், தேமுதிக இறுதி கட்ட பேச்சு வார்த்தைகளில் தங்கள் கூட்டணி கோரிக்கைகளை இன்னும் அதிகமாக உயர்த்திக்கொள்ளவே என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தேர்தல் நெறங்கும் சமயத்தில் தேமுதிகவின் இந்த சாமர்த்தியமான நகர்வு அதிமுக தலைமைக்கு ஒரு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு எப்படி இழுப்பது என்று அதிமுக தலைமை தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தேமுதிக எந்த பக்கம் செல்வது என்று தெரியாமல் குழப்பமான நிலையில் உள்ளது கூட்டணி பேச்சு வார்த்தைகளில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
