தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதன்படி பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கும் இபிஎஸ் அதிமுக தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வரும் நிர்வாகிகளை நீக்கிவிட்டு மீண்டும் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்டுவதற்கான வியூகங்களை வகுத்து வருகின்றார்.
இந்நிலையில் கூட்டணி பற்றி கவலைப்பட வேண்டாம் என கட்சியினருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அட்வைஸ் செய்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணி பற்றி நீங்கள் பேசவும் கவலைப்படவும் வேண்டாம். அது தானாகவே நடைபெறும். பூத் கமிட்டி பணிகளை சரியாக செய்தாலே வெற்றி உறுதி என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகம் சிறப்பு பொதுக்குழுவில் விஜய் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதிமுக – தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைவதில் இழுப்பறி தொடர்கிறது.
