உத்திரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் பகுதியில் 5 மற்றும் 7 வயது சகோதரிகள் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படித்து வந்தனர். பள்ளி முடிந்து 2 சிறுமிகளும் வீட்டிற்கு நடந்து வந்தனர். அப்போது தேன் வியாபாரியான அணில் என்பவர் பிஸ்கட் மற்றும் தேன் தருவதாக கூறி அந்த சிறுமிகளை ஏமாற்றி ஒரு வயல்வெளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அணில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பார்த்து சத்தம் போட்ட 5 வயது சிறுமியை கூர்மையான இரும்பு ஆயுதத்தால் பலமாக அடித்தார். இதனால் ஐந்து வயது சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே மகள்கள் வீட்டிற்கு வராததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது இரவு 11 மணிக்கு வயல்வெளியில் ஐந்து வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதிலிருந்து 100 மீட்டர் தொலைவில் 7 வயது சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி மயங்கி கிடந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அணிலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அணிலுக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் 1.37 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
