தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் தொண்டர் அணியின் ஆலோசனை கூட்டம் இன்று பனையூரில் நடைபெற உள்ளது. விஜய் கட்சி தொண்டர்களின் பாதுகாப்புக்காக தொகுதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்ற அடிப்படையில் தலா இரண்டு பேர் வீதம் 234 சட்டமன்ற தொகுதிகளில் 468 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தொண்டர் அணி நிர்வாகிகள் விஜய் பிரச்சாரம் செல்லும் இடங்களில் பாதுகாப்பு பணியை கவனிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டர் அணிகளுக்கு இன்று நடைபெறும் கூட்டத்தில் மேலும் சில முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது. கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழகம் பரப்புரையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில் இது போன்ற சம்பவம் இனி நடைபெறக்கூடாது என்பதற்காக தமிழக வெற்றிக்கலகம் மாவட்டம் தோறும் தொண்டர் அணி ஒன்றை உருவாக்கியுள்ளது.
