கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த அலாவுதீன் என்பவர் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள கார் ஸ்டாண்டில் கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். இவர் கடந்த ஓராண்டாக திடீரென காணாமல் போனதாக தெரிகிறது. இது பற்றி அவருடைய மனைவி சுமையா மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் என்னுடைய கணவரை காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். உடனே வழக்கு பதிவு செய்த போலீசார் ஓராண்டாக தேடி வந்த நிலையில் அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனிடையே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் சிறுமுகை சாலையில், என்னுடைய அண்ணனை காணவில்லை, என் அண்ணியுடன் நீ தவறான முறையில் தொடர்பு வைத்துள்ளாய், இதனால்தான் என் அண்ணன் அலாவுதீன் காணாமல் போய்விட்டார், உன்னை தீர்த்து கட்டாமல் விடமாட்டேன் என்று அலாவுதீன் தம்பி ஹாரிஸ், ஹக்கீம் என்ற நபரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்து உள்ளார். இந்த விவகாரம் காவல் நிலையம் வரை சென்றதால் ஹாரிஸ் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றொரு நபரையும் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
ஆனால் அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. அலாவுதீன் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டும்போது ஒரு பெண்ணுடன் தகாத உறவு இருந்துள்ளது, அதை விசாரித்தால் உண்மை என தெரிய வாய்ப்புள்ளதாக ஹக்கீம் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் ஒரு ஆளும் கட்சி கவுன்சிலர் அவருடைய மகன்களுடன் சேர்ந்து அலாவுதீனை கொலை செய்தது தெரியவந்தது.
அலாவுதீன் பேருந்து நிலையத்தில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போது அங்கு செல்போன் கடை வைத்து நடத்தி வந்த திமுக மூன்றாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ரவிக்குமார் என்பவருடைய இரண்டாவது மகன் சரண்குமார் என்பவரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பில் இருந்த நிலையில் ஒரு கட்டத்தில் சரண்குமாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர் மனைவியை கண்டித்ததால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால் அலாவுதீனை தீர்த்துக்கட்ட நினைத்து நைசாக பேசி அவரை வரவழைத்த திமுக கவுன்சிலர் ரவிக்குமார் தன்னுடைய மகன்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். பிறகு உடலை எடுத்துச் சென்று மாதேஸ்வரன் மலை கோவில் பின்புறம் உள்ள புதர் குப்பைகளை கொட்டும் இடத்தில் வைத்து தீயிட்டு எரித்துவிட்டு எதுவும் நடக்காதது போல இருந்துள்ளார். பிறகு கர்நாடகாவில் இருந்து தன் மனைவியை அழைத்து வந்து சரண்குமார் வாழ்ந்து வந்தார். இதனைத் தொடர்ந்து போலீஸ் சார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரையும் கைது செய்த விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது
