திருநெல்வேலி மாவட்டம் சிவகாமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். நேற்று பொன்ராஜ் தனது குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் பொன்ராஜின் வீட்டிற்குள் நுழைந்து கம்பு, கற்கள் போன்ற ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அவர்கள் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து சூறையாடி உள்ளனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொன்ராஜ் குடும்பத்தினர் அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் கோபமடைந்த அவர்கள் பள்ளி மாணவியான ஜோதி, கல்லூரி மாணவியான டெல்சி என சிறுமிகள் உட்பட பொன்ராஜின் குடும்பத்தினர் 5 பேரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் கீழே விழுந்த சிறுமிகள் மற்றும் பெண்களின் கால்களில் பாறாங்கற்களை தூக்கி போட்டதால் படுகாயம் ஏற்பட்டது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அநீதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன் விரோதம் மற்றும் நில தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்திருப்பதாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
