தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் விஜய் அதிரடியாக களத்தில் இறங்கி தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றார். தொடர்ந்து திமுகவை தங்கள் எதிரி என்று கூறிவரும் விஜய் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொடர் கனமழை காரணமாக நெல் மணிகள் வீணாகி முளைத்ததை போல மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்ப போவது உறுதி.
தொடர் மழை காரணமாக விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல் முறை வீணான போதே விரைந்து செயல்பட்டு மீதமுள்ள நெல்களை தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டும். விவசாயிகள் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தை காத்து பொருளாதார ரீதியில் அவர்களுடைய உயர்வுக்கு உதவியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். ஆனால் ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பு மூலமாக விளைவித்த நெல்லை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மலையில் நனைய விட்டு வீணாக்கி ஏழை மக்களின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது.
வெறும் விளம்பரத்திற்காக நானும் டெல்டா காரன் தான் என பெருமை பேசி வரும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு ஏழை விவசாயிகள் சார்பாக நாம் முன்வைக்கும் ஒரு சில கேள்விகள். டெல்டா விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகளை உரிய நேரத்தில் உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்யாமல் அவர்களின் வாழ்வாதாரத்தை வீணாக்கியதன் காரணம் என்ன? பருவ மழையை நம்பி விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
அப்படி இருக்கும்போது பருவ மழை காரணமாக விவசாய பயிர்கள் மற்றும் விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? என்று தொடர்ந்து அடுக்கடுக்கான கேள்விகளை விஜய் திமுக அரசுக்கு முன் வைத்துள்ளார். கரூரில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு அரசியல் ரீதியாக எந்தவித அறிக்கை மற்றும் அறிவிப்புகளையும் வெளியிடாமல் இருந்த விஜய் நேற்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய நிலையில் மீண்டும் அரசியல் பணிகளை தொடங்கியுள்ளார்.
