தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள இபிஎஸ் அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அதற்காக விஜய்யும் தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.
மறுபக்கம் முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே பலமாக இருக்கும் தனது கூட்டணி மூலமாக ஆட்சியைப் பிடித்து விடலாம் என்ற எண்ணத்தில் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் முயற்சியிலும் திமுக நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் நாம் ஏழாவது முறையாக ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பயிற்சி கூட்டத்தில் இன்று கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், தேர்தல் எனும் தேர்வுக்கு முன்னதாக நாம் செய்யும் ஒரு ரிவிஷன் தான் பயிற்சி கூட்டம். 2019 ஆம் ஆண்டு முதல் நாம் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். தமிழ்நாட்டு மக்கள் திராவிட ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால் மீண்டும் நாம் தான் ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
