மதுரை மாவட்டம் சிம்மக்கல் அருகே உள்ள வக்கீல் புதூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் மகள் பொன் ரூபினி. 17 வயதான இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு தன்னுடைய பெரியம்மா செல்வராணியுடன் அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு சாலையோரம் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. இதனையடுத்து சந்தேகத்தின் பெயரில் அதை திறந்து பார்த்தபோது அதில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததால் அந்த மாணவியும் அவருடைய பெரியம்மாவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இதனை அடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து வந்த காவல் துறையினர் அந்த பணத்தை சரிபார்த்த போது அதில் 17 லட்சத்தி 49 ஆயிரம் ரூபாய் இருந்துள்ளது. அந்த பணம் யாருடையது? எதற்காக சாலையில் வீசி சென்றார்கள்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மிகுந்த பொறுப்புணர்வோடு செயல்பட்ட அந்த மாணவி ரூபிணிக்கும் அவருடைய பெரியம்மா செல்வராணிக்கும் போலீசார் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
