கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள திலக் நகர் பகுதியில் நேற்று மாலை நீண்ட நேரமாக சாலையோரமாக ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவின் உள்ளே ஏதோ ஒரு பொருள் போர்வையில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்ததில் போர்வைக்குள் ஒரு பெண்ணின் சடலம் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்தப் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் பெயர் சல்மா என்பதும் அவருக்கு திருமணம் ஆகி நான்கு குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. சல்மாவின் கணவர் சமீபத்தில் உயிரிழந்த நிலையில் தன் குழந்தைகளுடன் அவர் வசித்து வந்துள்ளார். இதனிடையே அவருடைய தலையில் பலமாக தாக்கப்பட்டதற்கான அடையாளம் உள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அவரை யாரோ கொலை செய்து ஆட்டோவில் உடலை போட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
