தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜயை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் பாஜக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் விஜய் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அதேசமயம் கரூர் சம்பவத்திற்கு பிறகு தனது கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் விஜய் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் கரூர் விவகாரத்தைத் தொடர்ந்து விஜய்க்கு பாஜக வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விஜய் இனி ஒருபோதும் பாஜகவை எதிர்த்து அரசியல் பேசவே முடியாது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆதவ் அர்ஜுனா, தமிழக வெற்றி கழகம் கட்சியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டதாக குற்றம் சாட்டுகின்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியும் சரி அதன் தலைமையும் சரி நடந்த தவறுக்கு கொஞ்சம் கூட பொறுப்புணர்வு இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இனி விஜயின் அரசியல் பேச்சு எப்படி இருக்கும் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
