சிவகங்கை மாவட்டம் எஸ் புதூரை அடுத்த குன்னத்தூர் களத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயியான மச்சக்காளை என்பவருடைய இரண்டாவது மகள் ரூபிகா (21). இவருக்கும் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்த பாண்டி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடந்துள்ளது. பாண்டி திருச்சியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றார். இதனிடையே புதுமண தம்பதிகள் தல தீபாவளியை கொண்டாட அக்டோபர் 19ஆம் தேதி களத்துப்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளனர். குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய நிலையில் பாண்டி நேற்று தன் மனைவியிடம் வேலைக்கு செல்லப் போவதாக கூறியுள்ளார்.
தல தீபாவளி கொண்டாட வந்துவிட்டு உடனே ஏன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று ரூபிகா கேட்டுள்ளார். இருவருக்கும் இது சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டதால் பாண்டி நேற்று வேலைக்கு சென்று விட்டார். தான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் கணவர் வேலைக்கு சென்றதால் மன வருத்தம் அடைந்த ரூபிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆன மூன்று மாதத்தில் புதுமணப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
