ஓசூரில் ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்ததால் தன் இரண்டு மகன்களை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் கற்குளம் பகுதியை சேர்ந்த சிவபூபதி (45) என்பவர் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகின்றார். ஆன்லைன் நெட்வொர்க் ஷேர் மார்க்கெட் தொழில் செய்து வரும் இவருக்கு பார்வதி என்ற மனைவியும் நரேந்திர பூபதி (14) லத்தீஷ் பூபதி (11) என்ற இரண்டு மகன்களும் உள்ளன. சிறுவர்கள் இருவரும் ஓசூர் சமத்துவபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார்கள்.
இதனிடையே சிவ பூபதி ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சிவ பூபதி வீட்டில் நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாமல் இருந்த நிலையில் அவருடைய சகோதரர் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தார். அப்போது வீட்டில் சிவ பூபதி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருந்தார். மகன்களும் கழுத்து நெரிக்கப்பட்ட உயிரிழந்து கிடந்தனர். மனைவி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த கிராமத்திற்கு தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுவிட்டார்.
உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக சிவ பூபதி ஓசூரில் வாழ்ந்து வருவதாகவும் ஆன்லைன் வர்த்தகத்தை சொந்த ஊரிலும் சென்னையிலும் அவர் செய்து வந்த நிலையில் அதே தொழிலை ஓசூரிலும் செய்து வந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் அப்பகுதியில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
