மத்திய பிரதேசம் மாநிலத்தில் இருமல் மருந்து குடித்து 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் மறைவதற்குள் அங்குள்ள அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்தில் புழுக்கள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகார் மத்திய பிரதேசத்தின் சித்வாரா மாவட்டத்தில் 1 முதல் 6 வயது வரையிலான இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கடந்த மாதம் அடுத்தடுத்து உயிரிழந்தன. சிறுநீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததும் மருத்துவமனையில் பரிந்துரைக்கப்பட்ட கோல்ட்ரிப் மருந்து குடித்ததை அதற்கு காரணம் என்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கோல்ட்ரிப் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு குழந்தைகள் இறப்பு தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் குவாலியர் மாவட்டம், மொரார் நகரில் செயல்பட்டு வரக்கூடிய அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்கு வந்த குழந்தைக்கு அசித்ரோமைசின் ஆன்டிபயோடிக் மருந்து வழங்கப்பட்டுள்ளது. அந்த மருந்தின் புழுக்கள் இருந்ததை தொடர்ந்து குழந்தையின் தாய் மருத்துவமனையில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு மருத்துவமனையில் இருந்த அந்த மருந்து அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
