மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள், தனது மகளும் திமுக துணை பொதுச்செயலாளர் மற்றும் எம்பியுமான கனிமொழியுடன் சென்னை சிஐடி காலணியில் வசித்து வருகின்றார். இதனிடையே ராசாத்தி அம்மாளுக்கு சமீபகாலமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அஜீரண கோளாறு மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட வந்த அவர் இதற்காக ஜெர்மனியில் உள்ள பிரபலமான மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை பெற்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சென்னையில் உள்ள வீட்டில் இருந்த அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். வயது மூப்பு காரணமாக ராசாத்தி அம்மாள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு பிறகு அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
