திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதி அருகே உள்ள ராமநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருடைய மகன் ராமச்சந்திரன் (24). இவர் பால் கறவை தொழில் செய்து வரும் நிலையில் அதே பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களாக இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இதனிடையே நேற்று முன்தினம் அதிகாலை பால் கறவைக்குச் சென்ற ராமச்சந்திரனை அவருடைய மனைவி ஆர்த்தியின் தந்தை சந்திரன் வழிமறித்து வெட்டி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்திரனை கைது செய்துள்ளனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட ராமச்சந்திரனின் மனைவி ஆர்த்தி தனது காதல் கணவனை தனது தந்தை மற்றும் சகோதரர்கள் சேர்ந்து தான் கொலை செய்தார்கள் என்று புகார் தெரிவித்து அனைவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மருத்துவமனை அருகே போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் இன்று காலை ஆர்த்திக்கு தெரியாமல் அவரது இறந்த கணவரின் உடலை கணவரின் பெற்றோர் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்வதற்கு கொண்டு சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காதல் மனைவி ஆர்த்தி தன்னுடைய கணவனின் உடலை எனக்கு தெரியாமல் எப்படி கொண்டு சென்றீர்கள் என்று வாக்குவாதம் செய்து மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் அமர்ந்து போராட்டம் நடத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அவரை சமாதானம் செய்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.
இந்நிலையில் ராமச்சந்திரன் கொலை செய்யப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பெண்ணின் சகோதரர் ரிவீன் என்பவர் ராமச்சந்திரனை கொலை செய்வதாக மிரட்டி அனுப்பிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், நீ நரக வேதனையை அனுபவிப்ப, என் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போன உன் அப்படியே விட்டா நான் பொட்ட, உன்னை துண்டு துண்ட அறுத்து கண்ணை நோண்டி நரம்பை இழுத்து பயங்கரமா கொலை பண்ணுவேன் என்று கொடூரத்தின் உச்சத்தில் பேசியுள்ளார். எனவே ஆர்த்தி தன்னுடைய தந்தை மட்டுமல்லாமல் அண்ணன் மற்றும் அம்மா என குடும்பமே சேர்ந்து தான் கொலை செய்துள்ளது என்று கூறி அவர்களை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளார்
