தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என களத்தில் இறங்கி செயல்பட்டு வருகின்றன. இதனிடையே சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் விஜய்க்கு எதிராக பல கேள்விகளை எழுப்பிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சமீபத்தில் அமர்வுக்கு வந்த நிலையில் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கட்சியின் அடுத்த கட்டப் பணிகளை விஜய் செய்து வருகிறார்.
இந்நிலையில் கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து ஆறுதல் கூறி நேரில் நிதி உதவி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக நேற்று இரவு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பதற்கான இடத்தை தருவதற்கு பலரும் தயக்கம் காட்டுகின்றன. இதனால் இடத்தை தேர்வு செய்த பிறகு தீபாவளிக்கு பிறகு விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
