தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. சமீபத்தில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் விஜய்க்கு ஒரு பக்கம் சோகத்தை ஏற்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் தமிழக அரசியல் கணக்குகளையும் முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. கரூர் சம்பவத்திற்கு செந்தில் பாலாஜியின் சதியும் காவல்துறையின் அலட்சியமும் காரணம் என்று தமிழக வெற்றிக்கழகம் கட்சியும், விஜய் தாமதமாக வந்ததே சம்பவத்திற்கு காரணம் என்று திமுக அரசும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும் விஜய்க்கு எதிராக நிற்கும் நிலையில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வருகின்றன.
அதேசமயம் இந்த சம்பவத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு விஜயை தங்கள் பக்கம் இழுக்கவும் பாஜக தீவிரம் காட்டி வருகின்றது. மறுபக்கம் எடப்பாடியும் அதிமுகவில் விஜயை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நடிகர் விஜய் இணைவது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். தவெக மற்றும் அதிமுக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி என திருமாவளவன் கூறியதற்கு பதில் அளித்த அவர், எங்கள் கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எல்லாவற்றுக்குமே ஜனவரி மாதத்திற்கு பிறகு ஒரு முடிவு வரும் என நினைக்கிறேன் என்று சூசகமாக கூறியுள்ளார்.
