சிவகாசி ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் மக்கள் நம்பிக்கையின் கட்சியாக இருந்த அண்ணா திமுக, இன்று அமித்ஷா திமுகவாக மாறிவிட்டது. பழனிச்சாமியின் கைகளில் அதிமுகவின் முடிவு எழுதப்படுகிறது. மாவட்ட முதல் மாநிலம் வரை அதிமுக தவறான கைகளில் சென்று விட்டது. அதனால் கட்சியின் நம்பகத்தன்மை மக்கள் மத்தியில் அப்படியே குறைந்துவிட்டது. 1996 ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதும் 27 சதவீத வாக்கு பெற்ற அதிமுக கடந்த மக்களவைத் தேர்தலில் 21 சதவீதத்திற்கு சரிந்தது அதிர்ச்சி அளிக்கின்றது. வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.
ஆனால் அந்த தாக்கத்தின் அளவு வாக்கு பெட்டி திறக்கும் வரை தெரியாது. INDIA கூட்டணிக்கு எதிராக ஒரு புதிய கட்சி உருவாகலாம், ஆனால் அது அதிமுக அல்ல என்பது தெளிவாகிறது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி இதுவரை கூட்டணிக்காக பல தியாகங்களை செய்துள்ளது. தற்போது எங்களுடைய உரிமையை கோர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அந்த தியாகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகின்றோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கு பெறுவது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் நான் வலியுறுத்தி பேசுவேன் என்று மாணிக்கம் தாகூர் பேசியுள்ளது திமுக கூட்டணி இடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.
