பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் அட்டை என்பது ஒவ்வொரு குடிமகனுக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். ரேஷன் அட்டை என்ற இந்த குடும்ப அட்டையை பயன்படுத்தி ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்படுகின்றன. அதே சமயம் அரசு வழங்கக்கூடிய பல நிதி உதவிகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு தான் கிடைக்கிறது. எனவே ரேஷன் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக கருதப்படுகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் அக்டோபர் 11 அதாவது இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
