தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் திமுக தீவிரமாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறது. இதனிடையே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று திண்டுக்கல் வந்திருந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் புதிய மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைத்தார். அதோடு 49 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பல சுவாரசிய சம்பவங்கள் நிகழ்ந்தது. அதாவது விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சரவணன், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என பேசியது கட்சியினர் மற்றும் அதிகாரிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதைவிட மற்றொரு சம்பவம் என்னவென்றால் நிகழ்ச்சி நடைபெற்ற மேடையில் அமைச்சர் ஐ பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி எம்எல்ஏ செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் சரவணன் ஆகியோருக்கு நடுவே துணை முதல்வர் உதயநிதி நின்று கொண்டிருந்தார். அப்போது மேடைக்கு வந்த வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் துணை சபாநாயகர்மான காந்தி ராஜன் உதயநிதி ஸ்டாலினுக்கு ஏலக்காய் மாலை அணிவித்தார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று அவர் உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்தார். இதனால் சற்று அதிர்ச்சி அடைந்த உதயநிதி அவ்வாறு செய்யக்கூடாது என்று கூறினார். இந்த செயல் அருகில் நின்று கொண்டிருந்த அமைச்சர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தன்னைவிட வயதில் இளையவரான உதயநிதி ஸ்டாலின் காலில் திமுகவின் மூத்த எம்எல்ஏ விழுந்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அரசு விழா என்றும் பாராமல் தன்னைவிட மூத்த தலைவரை காலில் விழ வைப்பது தான் சமூக நீதியா என்று பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் விமர்சித்து வருகிறார்கள். மற்ற கட்சியினரை அடிமைகள் என்று கூறும் உதயநிதி ஸ்டாலின் தனது கட்சியினரையே குறிப்பாக மூத்த தலைவர்களையும் அடிமை போல் நடத்துவதாக பலரும் விமர்சித்து வரும் இடையில் தற்போது அது தொடர்பான வீடியோவும் வைரல் ஆகி வருகிறது.
