தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அதேசமயம் அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலை மாறி தற்போது விஜயும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ளதால் 2026 தேர்தல் களம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. இதனை சட்டரீதியாக எப்படி கையாளுவது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார்.
அதேசமயம் விஜய்க்கு இந்த விஷயத்தில் ஆதரவாக செயல்பட்டு அவரை தங்கள் கூட்டணியில் இணைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கரூர் வழக்கில் தன்னை தற்காத்துக் கொள்ள மத்திய பாஜக அரசியல் உதவி விஜய் நாடுவதாக முத்தரசன் விமர்சித்துள்ளார். சிபிஐ விசாரணை நடந்தால் பாஜக அரசை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிக்கலாம் என்ற நோக்கத்தில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியினர் அதை கோருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் எரிந்த வீட்டில் எடுப்பது லாபம் என அதிமுக மற்றும் பாஜக அரசியல் செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
