தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக இடையே தான் போட்டி என்ற நிலைமை மாறி தற்போது விஜய் களத்தில் இறங்கியுள்ளதால் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பரபரப்பாக பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜயின் தமிழக வெற்றி கழகம் அரசியல் களத்தில் முதல்முறையாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.
இதற்காக கடந்த ஆறு மாதங்களாக விஜய் தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சமீபத்தில் கரூரில் விஜய் நடத்திய தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது. தற்போது அந்த வழக்கை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து விஜய் தீவிர ஆலோசனையில் உள்ளார்.
இந்நிலையில் கரூர் துயரம் விஜயின் தீவிர அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது. இந்த விவகாரத்தில் 3 அறிக்கை, ஒரு வீடியோ வெளியிட்டு அமைதியாக இருக்கிறார். ஊடகங்களையும் சந்திக்கவில்லை. இதனிடையே இனியும் காலதாமதம் செய்தால் அது கட்சியின் செயல்பாட்டை முழுமையாக பாதிக்கும் என கட்சி நிர்வாகிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கரூர் செல்வதற்கு முன் ஊடகங்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
