“எனக்கு பிளட் கேன்சர், ஐஏஎஸ் படிக்க ஹெல்ப் பண்ணுங்க”… கோடிக்கணக்கில் மோசடி செய்த கல்லூரி மாணவி… பரிதாபம் பார்த்து ஏமாந்த பேராசிரியர்…!

By Nanthini on ஐப்பசி 4, 2025

Spread the love

வேலூரில் உள்ள தனியார் கலை கல்லூரியில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த குணா தேவி (24) என்ற பெண் கடந்த 2021 ஆம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படிப்பை முடித்துள்ளார். அப்போது அந்த துறை தலைவரும் பேராசிரியருமான ரூபேஷ் சனீஸ் குமாரிடம் குணா தேவி கல்லூரி படிப்புக்கு பிறகு ஐஏஎஸ் படிக்க உள்ளதாகவும் அதற்கு போதிய வசதி இல்லாததால் நிதி உதவி செய்யும்படியும் கேட்டுள்ளார். இதனால் கல்லூரி பேராசிரியரும் முதல் கட்டமாக 15000 பணம் கொடுத்துள்ளார்.

பிறகு கல்லூரி படிப்பை முடித்த பிறகு குணா தேவி கடந்த ஆண்டு செல்போனில் பேராசிரியரை மீண்டும் தொடர்பு கொண்டு, நான் உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் தங்கி பயிற்சி பெற்று வருகிறேன், தந்தை உயிரிழந்து விட்டதால் படிப்புக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன், எனக்கு ரத்த புற்றுநோய் இருப்பதால் உயிருக்கு போராடி வருகிறேன், சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் பல லட்சம் ரூபாய் தேவைப்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

   

இதனைக் கேட்டு வருந்திய பேராசிரியர் குணா தேவி சொன்னதை உண்மை என்று நம்பி உடனடியாக 15 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணுக்கு அனுப்பி உள்ளார். பிறகு பேராசிரியர் அந்த பெண்ணுக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தில் whatsapp குரூப் ஒன்றை உருவாக்கி தன்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உட்பட பலரை அதில் இணைத்து மாணவியின் மருத்துவ சிகிச்சை மற்றும் படிப்புக்காக பண உதவி செய்யும்படி கேட்டுள்ளார். அந்த whatsapp குழுவில் இருந்தவர்களும் பேராசிரியர் சொன்னதற்காக பணத்தை அனுப்பி உள்ளனர்.

   

அவர்கள் அனுப்பிய 54 லட்சம் ரூபாய் பணத்தை அந்த பெண்ணின் மருத்துவ செலவு மற்றும் ஐஏஎஸ் படிப்புக்கு பேராசிரியர் வழங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பேராசிரியர் குணா தேவிக்கு 70 லட்சம் ரூபாய் பணத்தை தனிப்பட்ட முறையில் வழங்கியுள்ளார். இதனைத் தவிர சமூக வலைத்தளங்களில் கொடுத்த விளம்பரம் மற்றும் பதிவு மூலம் 10 லட்சம் ரூபாய் வரை குணா தேவியின் வங்கி கணக்குக்கு சென்றுள்ளது. இப்படியான நிலையில் குணா தேவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஐஏஎஸ் பயிற்சி முடிந்து விட்டதாக கூறி அவரின் அடையாள அட்டையை பேராசிரியரின் செல்போனுக்கு அனுப்பியுள்ளார்.

 

அதனைப் பார்த்த பேராசிரியருக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் ஐஏஎஸ் பயிற்சி அகாடமிக்கு சென்று அவரைப்பற்றி பேராசிரியர் விசாரித்த போது குணா தேவி அங்கு பயிற்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. மேலும் பல நபர்களிடம் குணா தேவி குறித்து விசாரித்த போது ஐஏஎஸ் படிப்பதற்காக மற்றும் மருத்துவ செலவுக்காக என்று கூறி பேராசிரியர் உட்பட பலரிடம் பண மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பேராசிரியர் பெண்ணை தொடர்பு கொண்டு கேட்டதற்கு அலட்சியமாக பதில் கூறியுள்ளார். இதனால் பேராசிரியர் உடனே போலீசில் புகார் அளித்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி குணா தேவி மோசடி செய்ததை உறுதி செய்தனர். தற்போது அவரை கைது செய்துள்ள போலீசார் வேறு யாரிடமாவது அவர் பணம் ஏமாற்றி உள்ளாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.