தமிழக வெற்றி கழகம் விஜய் தாமதமாக வருவதால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்யவில்லை என்று முதல்வருக்கு 12 கேள்விகளை முன் வைத்துள்ளார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று பாஜகவால் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட உண்மை கண்டறியும் குழுவுடன் கரூர் கூட்ட நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினோம். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குரலும் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தை விவரிக்க முடியவில்லை. முழுமையாக கலந்துரையாடி இந்த பிரச்சனையை தெளிவாக புரிந்து கொண்ட பின்னர் மனதில் எழுந்த கேள்விகளை முதல்வர் ஸ்டாலினிடம் முன்வைக்கிறேன்.
1. முதல்வர் மற்றும் துணை முதல்வர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு மட்டும் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானாவை ஒதுக்கிய நிலையில் மற்ற கட்சிகளுக்கு ஏன் ஒதுக்கவில்லை.
2. விஜய் அவர்கள் மீது செருப்பு வீசப்பட்டதையும் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மீது தடியடி நடத்தியதையும் வீடியோக்கள் காட்டுகின்றன. கத்தியால் குத்தப்பட்டதாகவும் கூறுகிறார்கள். இதைத் தாண்டி கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு என்ன காரணம்?
3. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம், வேங்கை வயல் விவகாரம், லாக்கப் மரணங்கள் என மற்ற அனைத்திற்கும் செல்லாத முதல்வர் கரூரில் மட்டும் சிறப்பு கவனம் செலுத்த என்ன காரணம்?
4. திமுகவினரின் உணர்ச்சி பூர்வ நாடகத்தால் சந்தேகமடைந்த கோடிக்கணக்கான மக்களில் நானும் ஒருவன் தான். கூட்ட நெரிசலுக்கு பின்னர் உண்மையை மறைக்க திமுக அரசு இவ்வளவு அசாதாரண அவசரத்துடன் ஏன் செயல்பட்டது?
5. சுமார் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்து பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் உட்பட நான்கு பேரை கைது செய்து மக்கள் மத்தியில் உள்ள அனைத்து கேள்விகளையும் சந்தேகங்களையும் ஏன் இவ்வளவு விரைவாக திமுக அரசு முடக்குகிறது என்ற கேள்வி உள்ளது?
6. பத்தாயிரம் பேர் தான் கூடுவார் என்று தவறாக கணித்ததாக விஜய் மீது குற்றம் சாட்டும் திமுக அரசு மற்றும் காவல்துறை கூட்டத்தை ஏன் சரியாக மதிப்பிடவில்லை?
7. விஜய் தாமதமாக வருவதால் சில அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என அரசு கருதினால் கூட்டத்தை ஏன் ரத்து செய்ய முடியவில்லை?
8. கூட்டத்தை கட்டுப்படுத்த பணியமர்த்தப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை குறைவு. உண்மையிலேயே எத்தனை பேர் பணியில் இருந்தார்கள்?
9. இப்படி ஒரு அரசியல் பேரணி நடக்கும் சமயத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கரூரில் இல்லாததற்கு என்ன காரணம்?
10. இவ்வளவு குறைபாடுகள் அரசு தரப்பில் உள்ளன என்பது நிரூபணமான பிறகும் ஏன் அந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய எந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை?
11. அறிக்கை சமர்ப்பிக்கும் முன்பு திமுகவின் சட்டம் ஒழுங்கு தோல்வியை மறைக்கும் விதமான கருத்துக்களை விசாரணை ஆணைய தலைவர் ஏன் வெளியிடவில்லை?
12. அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றிய திமுக அரசு கரூர் வழக்கை ஒப்படைக்க தயங்குவதற்கு என்ன காரணம்?
திமுக அரசி நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடர் தான் இந்த துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாகத் தெரிகிறது என்று முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நயினார் நாகேந்திரன் முன் வைத்துள்ளார்.
