கரூரில் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயின் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்ட நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பல தரப்பினரும் விஜய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் நீதிமன்றம் தனிக்குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் அனைத்து விமர்சனங்களுக்கும் பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என் வாழ்க்கையில் இது போன்ற சூழலை நான் சந்தித்ததில்லை. மனம் முழுக்க வலிக்கிறது. ஏற்கனவே ஐந்து மாவட்டங்களில் பிரச்சாரம் செய்தோம். அங்கெல்லாம் நடக்காமல் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது. மக்களுக்கு தெரியும். கரூர் மக்கள் நடந்த உண்மைகளை சொல்லும் போது கடவுளே வந்து சொல்வது போல உள்ளது. சீக்கிரமே எல்லா உண்மைகளும் வெளியே வரும். சிஎம் சார் கோபம் இருந்தாலோ பழிவாங்கும் எண்ணம் இருந்தாலோ என்மீது கை வையுங்கள். ஆனால் தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள்.
எங்களுக்கு தரப்பட்ட இடத்தில் போய் பேசியதை தாண்டி எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை. இருந்தாலும் என் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் மீது முதல் தகவல் அறிக்கை போடுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் உண்மைகளை சொல்லும் தோழர்கள் மீதும் ஃஎப்ஐஆர் போட்டு உள்ளார்கள். நான் ஒன்னு வீட்டிலோ அல்லது கட்சி அலுவலகத்தில் தான் இருப்பேன். தோழர்களே நமது அரசியல் பயணம் வலிமையுடன் இன்னும் தைரியத்துடன் தொடரும். இந்த நேரத்தில் சொந்தங்களை இழந்து தவிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்ன ஆறுதல் சொன்னாலும் உங்கள் இழப்புக்கு ஈடாகாது என எனக்கு தெரியும். மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் விரைவில் நலம் பெற வேண்டும் என இந்த நேரத்தில் நான் வேண்டிக் கொள்கிறேன் என விஜய் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025
