தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முறமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபக்கம் கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக போட்டி என்ற காலம் போய் தற்போது விஜயும் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கிறது.
இதனிடையே தமிழக பாஜக தலைமை மாறியதும் கோவில்களில் தியானம் செய்தார் அண்ணாமலை. கட்சியின் தேசிய பொறுப்பு அவருக்கு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் மாநில நிகழ்வுகளில் கூட தலை காட்டாமல் இருந்தார். இந்நிலையில் அண்ணாமலையின் செயலால் நயினார் நாகேந்திரானின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கரூர் துயரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அண்ணாமலை நேற்று அறிவித்தார். மாநில அளவில் எந்த பொறுப்பிலும் இல்லாத அவர் நிதி உதவியை எப்படி அறிவிக்கலாம் என்ற கேள்வியை எழுப்பும் நயினார் ஆதரவாளர்கள், இது தொடர்பாக டெல்லி பாஜகவிடம் புகார் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
