தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரூர் பரப்பரையின் மீது பத்தாயிரம் பேர் வருவார்கள் என சொன்னார்கள். ஆனால் 27 ஆயிரம் பேர் வரை வந்துள்ளார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். கரூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பத்தாயிரம் பேரை விட அதிகமாக எதிர்பார்த்துதான் காவல்துறையினர் பணியமர்த்தப்பட்டார்கள். ஆனால் 27 ஆயிரம் பேர் வரை வந்துள்ளார்கள். பரப்புரையில் நடந்த இடத்திற்கு இரவு ஏழு மணிக்கு மேல்தான் விஜய் வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
