தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று இரவு 7:30 மணிக்கு கரூரில் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு வந்தடைந்தார். 12 மணிக்கு அவர் வருவார் என கூறப்பட்ட நிலையில் விஜய் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவரை பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடி இருந்தனர். இந்த நிலையில் விஜய் பேசிக்கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயங்கி விழுந்தனர். இந்த கோர சம்பவத்தில் 10 குழந்தைகள், 17 பெண்கள், 9 ஆண்கள் என 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேர்தல் சுற்று பயணத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை கரூர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள X தள பதிவில், இரவு முழுவதும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிந்திய கண்ணீரும் அவர்களது துக்கம் நிறைந்த அழுகுரல் ஏற்படுத்திய வலியும் என் நெஞ்சத்தில் இருந்து அகலவில்லை என்று தெரிவித்துள்ளார்.
