திருச்சியில் தனியார் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. திருச்சியின் மணிகண்டம் பகுதியில் பிரபலமான பொறியியல் கல்லூரியில் கேகே நகரை சேர்ந்த தமிழ் (52) என்பவர் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி ECE முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆய்வகப் பயிற்சியை நடந்த போது 17 வயது மாணவியை தன்னுடைய அறைக்கு பேராசிரியர் தமிழ் அழைத்துள்ளார். அங்கு சென்ற மாணவி இடம் செல்போன் வாங்கி தரட்டுமா என்று கேட்ட பேராசிரியர் மாணவியை வலுக்கட்டாயமாக கட்டி பிடிக்க முயற்சி செய்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் மாணவியின் அங்க அளவுகளை கேட்டு ஆபாசமாகவும் பேசியுள்ளார். பிறகு மாணவியை கட்டிப்பிடித்து முத்தமிட முயன்றார். உடனே அங்கிருந்து தப்பித்த மாணவி இது தொடர்பாக கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வகுப்பு பேராசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால் பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் தனக்கு நடந்த கொடுமைகள் பற்றி மாணவி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் கல்லூரிக்கு சென்ற காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பேராசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். தொடர்ந்து பேராசிரியரை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
