கரூர் மாவட்டம் சாலப்பாளையம் ஜே ஜே நகர் பகுதியை சேர்ந்தவர் நவீன். இவரது மனைவி ரேணுகா. இவர் மணல்மேடு நியாய விலை கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். தற்போது ரேணுகா 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். சம்பவம் நடந்த அன்று நவீனும், ரேணுகாவும் இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் தண்ணீர் பந்தல் பகுதியில் சென்ற போது திமுக மாநாட்டை முடித்துவிட்டு சென்ற பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ரேணுகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். நவீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் உயிரிழந்த ரேணுகாவிற்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
