தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்தித்திருந்தார். அப்போது அவர் காரில் முகத்தை மூடியபடி சென்றது தான் தற்போது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இன்றைய தினம் இரண்டு நாட்களாக நான் டெல்லி சென்று வந்த பிறகு பல விமர்சனங்கள் வெளியாகி வருகின்றது.
நான் அமித்ஷாவை சந்திக்கிறேன் என்று எல்லோருக்கும் நன்றாகவே தெரியும். 16ம் தேதி இரவு நான் அவரை சந்திக்க சென்றேன். என்னுடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சேர்ந்து சந்தித்து விட்டு வந்தோம். அப்போது இரவு 10 மணிக்கு எங்களோடு இருந்தவர்களிடம் நீங்கள் செல்லுங்கள் நான் பேசிவிட்டு வருகிறேன் என்று சொன்ன பிறகு அவர்கள் சென்று விட்டனர். நான் காலையில் பிரதமர் மோடியை அவருடைய இல்லத்தில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அப்போதும் அரசாங்க காரில் தான் பயணம் செய்தேன். நான் தமிழ்நாடு இல்லத்தில் இருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் சென்றேன்.
அமித்ஷா வீட்டிலிருந்து நான் வெளியே வரும்போது என்னுடைய முகத்தை துடைத்தேன். அப்போது அதை எடுத்து அரசியல் செய்கிறீர்களே உங்களுக்கு வெட்கமாகவும் வேதனையாகவும் இல்லையா. இன்னும் சொல்லப்போனால் நான் வருத்தத்தோடு சொல்கிறேன். இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட உங்களிடம் சொல்லிவிட்டு தான் போக வேண்டும். அப்படிப்பட்ட நிலைமைக்கு இன்றைய அரசியல் போய்விட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்
