பெங்களூரு சந்திரா லே அவுட் அருகே ஒரு பெண் வசித்து வந்த நிலையில் அவருக்கும் சபாஜ் அலி என்பவருக்கும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. சாபஜ் அலி இறைச்சிக்கடை நடத்திவரும் நிலையில் அவருக்கு அருகில் ஐந்து கடைகள் உள்ளன. இதனிடையே சாபஜ் அலிக்கு குழந்தை இல்லாததால் அதற்கு மனைவிதான் காரணம் என்று கூறி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் தன் மனைவியை இறைச்சி கடைக்கு அழைத்துச் சென்று அங்குள்ள கழிவுகளை சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடுத்தி தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் குழந்தை இல்லாததை காரணம் காட்டி கடந்த ஓராண்டுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணை சாபஜ் அலி திருமணம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய முதல் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட அவர் விவாகரத்து செய்வதாக கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் செல்போனில் மூன்று முறை தலாக் கூறிவிட்டு முதல் மனைவியை அவர் விவாகரத்து செய்துள்ளார்.
இதனை அந்தப் பெண் ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் இது குறித்து முஸ்லிம் மத தலைவர்களிடம் புகார் அளித்த நிலையில் அவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்ணின் உறவினர்களை சாபஜ் அலி தாக்கம் முயன்றுள்ளார். மேலும் விவாகரத்து கொடுக்க அந்தப் பெண் மறுத்துவிட்ட நிலையில் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மீறி செல்போனில் தலாக் என்று கூறி தன்னை விவாகரத்து செய்திருப்பதாக அவர் மீது அந்தப் பெண் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
