மயிலாடுதுறை மாவட்டம் அரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு இரண்டு மகள்களும், வைரமுத்து என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக வைரமுத்து அதே பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் மாலினியை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த மாலினியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அன்று மாலினியின் தாய் வைரமுத்து மெக்கானிக்காக வேலை பார்க்கும் இடத்திற்கே சென்று தகராறு செய்துள்ளார். பின்னர் இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் அழைத்து விசாரித்த போது மாலினி வைரமுத்துவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால் இருவருக்கும் பதிவு திருமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த வைரமுத்துவை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனால் படுகாயமடைந்த வைரமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
