கலைஞர் மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று அன்பு கரங்கள் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் சமூகத்தில் மிகவும் வறுமையில் சிக்கித் தவிக்கும் குடும்பங்களை கண்டறிந்து அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள், கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாத்து அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுப்பது.
இந்த திட்டத்தின் மூலம் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொருவரால் பராமரிக்க முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள், பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகள், கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் பயன்பெறலாம். அன்பு கரங்கள் திட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு 18 வயது முடியும் வரை மாதம் தோறும் 2000 ரூபாய் நிதி உதவி அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். பள்ளி படிப்பை முடித்த பிறகு அவர்களது உயர் கல்வி திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கும் அரசு துணையாக இருக்கும். இந்த திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
