ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக கூறப்பட்ட 3 நிறுவனங்களும் தமிழகத்தில் ஏற்கனவே இயங்கி வரும் நிலையில், முதலமைச்சருக்கு இருக்கும் பணிகளை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு பயணம் சென்றது ஏன்? அவர் நினைத்திருந்தால் இந்த செயலை அவர் அறையிலேயே முடித்திருக்கலாம். அதை விட்டுவிட்டு 10 நாள் ஐரோப்பிய பயணம் மேற்கொண்டதற்கு காரணம் என்ன? என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சர் டிஆர்பி ராஜா, “பொய் பேசி தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் இழிவு படுத்துவதே பாஜக தலைவர் பதவியில் இருப்பதற்கான ஒரே தகுதியா? ஜெர்மனியில் தமிழ்நாடு முதலமைச்சர் முதல் நாளே ரூ. 3201 கோடிகணக்கான முதலீட்டு ஒப்பந்தங்களை போட்டுள்ளார். அதில் ஒரு நிறுவனமான Knorr-Bremse சென்னையில் உள்ள நிறுவனம் என்றும், அதற்கு ஜெர்மனி போய் ஒப்பந்தம் போட வேண்டுமா என்றும் நயினார் நாகேந்திரன் கேட்டிருந்தார். இவரது கேள்வி மிகவும் குழந்தைத்தனமாக இருக்கிறது.
120 ஆண்டு கால வரலாறு கொண்ட Knorr-Bremse நிறுவனத்திற்கு உற்பத்தி தொழிற்சாலை தமிழ்நாட்டில் கிடையாது. திராவிட மாடல் அரசின் கடும் முயற்சிகளால் மட்டுமே அவர்கள் முதன் முதலில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அலுவலகத்தை, சென்னையில் தொடங்கினர். மேலும் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் அவர்களது முதல் ரயில் பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கின. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு உயர்தர வேலை வாய்ப்பு கிடைக்கும். மேலும் மகாராஷ்டிரா பாஜக முதலமைச்சர் டாவோஸ் நகரில் இருந்து 15 லட்சம் கோடி முதலீட்டில் ஈர்த்துள்ளார் என்ற பாஜக மாநில தலைவர் கூறியிருந்தார். டாவோஸ் நகரில் இருந்து மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள இந்திய தொழில் நிறுவனங்களுடன் மும்பையிலே உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தோடு வீடியோ கான்பரன்ஸில் பேசி, பரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்ட கதைகளை, பாஜக தலைவர் அறிந்து கொள்வது நல்லது. டாவோசில் நடந்த இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் MoU போடும் பித்தலாட்டங்கள் அனைத்தையும் நாடு நன்றாக அறியும். திராவிட மாடல அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஒரு பொழுதும் இது போன்ற சில்லறை வேலைகளை செய்யாது.
இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளுடன் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. மேலும் பொருளாதாரத்தில் இரட்டை இலக்கை அடைந்து சாதனை படைத்து, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசே சான்றிதழ் அளித்துள்ளது. எனவே தமிழ்நாட்டை இழிவுபடுத்தும் பேச்சுக்களை குறைத்துவிட்டு, உண்மை தரவுகளை அறிந்து கொள்ள முயற்சி எடுக்குமாறு பாஜக தலைவரை, டிஆர்பி ராஜா கேட்டுக்கொண்டார்.
