மன்னார்குடியிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் ரயில் நேற்று அதிகாலை திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயில் புறப்பட்டபோது திருப்பூரைச் சேர்ந்த சுசிலா(58) என்பவர் தனது 10 வயது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து வேகமாக இறங்க முயன்றார். அப்போது சுசிலா நிலைதடுமாறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே இருக்கும் பகுதியில் தவறி விழுந்து விட்டார்.
இதனை பார்த்ததும் ரயில்வே பாதுகாப்பு படை பெண் காவலர் திவ்யா என்பவர் ஓடி சென்று அசையாமல் இருக்க அறிவுறுத்தி அவரை மீட்க முயற்சி செய்தார். அதற்குள் ரயில் பயணி ஒருவர் அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தியவுடன் திவ்யா பெண் பயணியை வெளியே தூக்கினார். சரியான நேரத்தில் பெண் பயணியை காப்பாற்றிய திவ்யாவின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
