தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து கொண்டிருக்கும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வாக்குறுதியில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தகுதியான விடுபட்ட பெண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சட்ட சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி தற்போது உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக தமிழகத்தில் விடுபட்ட குடும்ப தலைவிகள் அனைவரும் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து வருகிறார்கள். இந்நிலையில் முதன் முதலில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் எஸ்எம்எஸ் மூலம் பதிலளிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. மகளிர் உரிமைத்தொகை தொடர்பான தகவல்களை விண்ணப்பதாரர்கள் https://kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் நேரடியாக அறிந்து கொள்ளலாம். உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டும் 15 லட்சம் பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்காக விண்ணப்பித்துள்ளனர்.
