அனுமதி இல்லாமல் மண்ணள்ளியவர்களை தட்டி கேட்ட பெண் விஏஓ அதிகாரியை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பாலமேட்டில் அனுமதி இல்லாமல் கிராவல் மண் அள்ளிய சீனிவாசன் என்பவரை பெண் விஏஓ அதிகாரி சிவகாமி தடுத்து நிறுத்தியுள்ளார். பிறகு வீட்டுக்கு வந்த போது வீடு தேடி வந்த சீனிவாசன் சிவகாமி மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் காயமடைந்த அந்தப் பெண் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்த கிராம நிர்வாக அலுவலர் நல சங்கத்தினர் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
தாக்குதலில் ஈடுபட்ட சீனிவாசன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். சிகிச்சையில் உள்ள அந்த அதிகாரி கூறுகையில், நேற்று காலை 10 மணிக்கு நான் அலுவலகத்திற்கு சென்றபோது கிராமத்தில் மண் அள்ளுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் பீல்டுக்கு சென்று மண் அள்ளிய நபர்களிடம் கேட்டபோது அவர்கள் ஒரு சீட்டை காட்டினர். அந்த சீட்டு என்னுடைய வட்டம் கிடையாது, என்னுடைய கிராமம் கிடையாது, வேறு கிராமத்தில் இருக்கும் சீட்டை காண்பித்தனர். அவர்களுடைய பெயர் முத்துக்குமார் மற்றும் கிருபா.
அவர்களிடம் முறையாக அனுமதி பெற்று மண்ணள்ளுங்கள் என்று கூறினேன். நாங்கள் எல்லா பக்கமும் இப்படிதான் செய்கிறோம், உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ, லாரி ஏற்றி கொன்று விடுவேன் என்று என்னை மிரட்டினார்கள். உடனே நான் ஆர்.ஐ-க்கு போன் செய்ததும் அவர் இது தவறு என்ன அவர்களிடம் கூறிய பிறகு அவர்கள் மண்ணை கொட்டி விட்டு சென்று விட்டனர். பிறகு கிருபா என்பவர் சீனிவாசன் என்பவரிடம் சொல்லி என் கணவருக்கு போன் பண்ணி மிரட்டினார்கள். கொலை மிரட்டல் விடுத்த நிலையில் என் வீட்டில் என் மாமியார் மற்றும் ஒரு வயது குழந்தையுடன் இருந்தபோது என்னை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்கினார்கள் என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.
