மதுரையில் வருகின்ற ஆகஸ்ட் 21ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பாகவே விஜய் மதுரைக்கு சென்று விட்டார். இந்நிலையில் மதுரை பாரபத்தியில் நடைபெறவுள்ள மாநாட்டிற்கு ஆளும் கட்சியான திமுகவால் தடங்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாநாட்டுக்கு மக்களை அழைத்து வருவதற்கு பயண வாகனங்களை வாடகைக்கு எடுக்க மாவட்ட நிர்வாகிகள் மிரட்டுவதாகவும், வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுக நேரடியாக தமிழக வெற்றி கழகம் கட்சியை எதிர்காது என்றும் இது அவர்களின் அரசியல் உத்தியாக இருக்கலாம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.
ஆளும் திமுக அரசு பாஜக மாநாடுகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால் தமிழக வெற்றி கழகம் மாநாட்டிற்கு மட்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநாட்டில் சுமார் 1.5 லட்சம் இருக்கைகள் போட திட்டமிடப்பட்டு ஐந்து நபர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் நான்கு ஒப்பந்ததாரர்கள் இருக்கைகள் தர முடியாது என்று கூறியதால் கேரளாவில் இருந்து நாற்காலிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதுவும் ஆளும் கட்சியினர் கொடுத்த நெருக்கடியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒப்பந்ததாரர்களுக்கு அரசியல் அழுத்தம் தரப்பட்டது தான் இதற்கு காரணம் எனவும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
