தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போதே தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. இந்த முறை எப்படியாவது அதிமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட வேண்டும் என்ற சிந்தனையில் இபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று பாஜக சொல்லிக் கொண்டிருக்க ஈபிஎஸ் தான்தான் முதல்வர் வேட்பாளர் என மறுபக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதேசமயம் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா என்பதை தாங்கள்தான் முடிவு செய்வோம் என்றும் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் கூட்டணி ஆட்சி என்று பாஜகவினரும் தனித்து ஆட்சி என்று அதிமுகவினரும் கூறி வருகிறார்கள். இதனால் அதிமுக மற்றும் பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது.
இந்நிலையில் நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழக மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே மொத்த கருத்துடைய இரு கட்சிகள் ( அதிமுக மற்றும் பாஜக) கூட்டணி அமைத்துள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் என்பதால்தான் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று இபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
