நாளை ஆடிப்பெருக்கை முன்னிட்டு விரதம் இருப்பது எப்படி..? இதை செய்தால் திருமணம் ஆனவர்களுக்கும், ஆகாதவர்களுக்கு நன்மை கிட்டும்..!!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

ஆடிப்பெருக்கு அன்று பொதுவாக அனைவருமே நீர் நிலைகளுக்கு சென்று விரதமிருந்து பூஜைகள் செய்வார்கள். அப்படியே நீர்நிலைகளுக்கு சென்று பூஜை செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்து விரதம் இருந்து பூஜை செய்து கடவுள் அருளைப் பெறலாம். இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஆடிப்பெருக்கு அன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து வாசல் தெளித்து, வீட்டை துடைத்து, மாக்கோலம் இட்டு குளிக்க வேண்டும். பூஜை அறையில் சாமி படங்களை பூக்களால் அலங்கரித்து புது மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம், பழம், பத்தி, கற்பூரம், வெற்றிலைப்பாக்கு, தேங்காய் முதலிய பொருட்களை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு நிறைக் குடத்தில் இருந்து கலசங்களில் நீர் எடுத்து அரைத்த  மஞ்சள் சேர்க்க வேண்டும்.

அந்த கலச நீரை விளக்கேற்றி அதன் முன்வைத்து தீபாரதனை செய்து கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, வைகை உள்ளிட்ட புனித நதிகளை மனதில் நினைத்து மனமுருகி வழிபாடு செய்ய வேண்டும். அந்த தீர்த்தத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் தலையில் தெளித்துக் கொண்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். மீதி இருக்கும் தண்ணீரை மரம் செடியில் ஊற்றி விடலாம்.

   

பிறகு மஞ்சள் கயிறை கணவன் கைகளால் மாற்றிக்கொள்ள வேண்டும். திருமணமாகாத பெண்கள்  தாலியாக பாவித்து கட்டிக் கொள்ள அடுத்த ஆண்டுக்குள்  திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. ஆடிப்பெருக்கு அன்று முடிந்தவர்கள் பத்திரப்பதிவு முதலான புதிய முயற்சிகளை செய்யலாம். முடியாதவர்கள் அரிசி, பருப்பு முதலான மளிகை பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். ஆடிப்பெருக்கு என்று புதிய தொடக்கம் வளர்ச்சியை கொடுக்கும் என்பது நம்பிக்கை.