நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் திமுக சார்பாக ராஜ்யசபா MP-யாக பதவிப்பிரமாணம் ஏற்றார். இதனையடுத்து தமிழில் தனது முதல் குரலை நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுகவின் சல்மா, சிவலிங்கம் மற்றும் வில்சன் ஆகியோர் அடுத்தடுத்து தமிழ் மொழியில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்கள். இதனைத்தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி-ஆக பதவியேற்ற மக்கள் நீதி மய்யம் தலைவரை வாழ்த்தி அவருடைய கட்சியினர் #கமலஹாசன்_எனும்_ நான் என்ற ஹேஷ் டேக்கை டிரெண்ட் செய்து வருகிறார்கள்.
முன்னதாக மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் அவருக்கு பல இடங்களில் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள். இதில் “மத்திய அரசின் கோட்டைக்குள் காந்தியின் பேரன் கமல்ஹாசன் வருகிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கமலஹாசன் காந்தி அகிம்சையின் மீது தன்னுடைய ஈடுபாடு குறித்து பல இடங்களில் கூறியுள்ளார். மேலும் அவர் இயக்கி நடித்த ஹேராம் படத்தில் கூட காந்தியை மையமாக வைத்து நடித்திருந்தார். எனவே தான் காந்தியின் பேரன் என கமல்ஹாசனை வாழ்த்தி சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுவரொட்டி ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
