இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதன் பிறகு இவருடைய நடிப்பு அனைவரையும் அசர வைத்த நிலையில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார். இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார்.

ஹிந்தியில் யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜா சாப் மற்றும் கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் மலையாளத்தில் மோகன்லால் உடன் ஹிருதயபூர்வம் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இப்படியான நிலையில் மாளவிகா மோகனனுக்கு மும்பையில் ரயிலில் பயணிக்கும் போது மிகவும் மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதனை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியுள்ளார். அதாவது, மும்பை தற்போது பாதுகாப்பான நகரமா என்று கேட்டால் அதற்கு இப்போதைக்கு பாதுகாப்பான நகரம் என்றுதான் கூறுவேன்.

அதற்கு காரணம் என்னிடம் தனியாக கார் ஒன்று உள்ளது. கார் ஓட்டுவதற்கு நான் தனியாக ஒரு டிரைவரை வேலைக்கு வைத்துள்ளேன். ஆனால் நான் மும்பையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மும்பை பாதுகாப்பானதா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்லுவேன். குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் மும்பை கிடையாது. ஒருமுறை நானும் என்னுடைய தோழியும் இரவு சுமார் 9.30 மணிக்கு எலக்ட்ரிக் ட்ரெயினில் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தோம். நாங்கள் இருவரும் முதல் வகுப்பு பெட்டியில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து கொண்டிருந்தபோது ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது.

அப்போது என் அருகில் வந்த ஒரு மர்ம நபர் ஜன்னலில் அவரது முகத்தை வைத்து முத்தம் கேட்டார். எனக்கு ரொம்பவே பயமாகிவிட்டது. பயத்தில் நாங்கள் அப்படியே உறைந்து போய் விட்டோம். அந்த சமயத்தில் பெட்டியில் எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது ரயில் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்டு விட்டது. நல்ல வேலை என்று நாங்கள் தப்பித்தோம். பெண்களுக்கு எந்த இடமும் பாதுகாப்பானதாக இருக்காது என்று மாளவிகா மோகனன் பேசியுள்ளார்.
